கிரிக்கெட்டில் தற்போதைய சூழலில் அம்பயர்கள் படுமோசமாக செயல்படுகின்றனர். அம்பயர்களின் தவறான முடிவுகளால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக திரும்பிவிடுகிறது. 

ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில்தான், அம்பயர்கள் மோசமாக செயல்படுகிறார்கள் என்றால், சர்வதேச போட்டிகளிலும் அம்பயர்களின் செயல்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. உலக கோப்பை போன்ற பெரிய மற்றும் முக்கியமான தொடரிலேயே அம்பயர்கள் சொதப்புகின்றனர்.

உலக கோப்பையில் அம்பயர்களின் தவறான முடிவுகளால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கிறது. அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐசிசி-யின் டி.ஆர்.எஸ் விதி வீரர்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் வகையிலேயே உள்ளது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் ஓவர்த்ரோவிற்கு அம்பயர் தர்மசேனா 6 ரன்கள் வழங்கியது தவறு என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அதற்கு 5 ரன்கள் தான் வழங்கியிருக்க வேண்டும். 5 ரன்கள் வழங்கியிருந்தால் அடுத்த பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்க மாட்டார். முக்கியமான அந்த போட்டி டிரா ஆனது. எனவே அம்பயர் தவறாக கூடுதலாக வழங்கிய ஒரு ரன்னால் போட்டியின் முடிவே மாறிவிட்டது. கோப்பையை எந்த அணி தூக்க வேண்டும் என்பதை தீர்மானித்ததில் அந்த ஒரு ரன்னுக்கும் முக்கிய பங்குண்டு.

எல்பிடபிள்யூ-விற்கு முடிவெடுப்பதில் தொடங்கி இதுமாதிரி அம்பயர்கள் பல தவறான முடிவுகளை அடிக்கடி எடுக்கின்றனர். அம்பயர்களின் மோசமான அம்பயரிங்காலேயே பல போட்டிகளின் முடிவுகள் மாறுகின்றன. மாடர்ன் டே கிரிக்கெட்டில் அம்பயரிங்கின் தரம் குறைவாக இருப்பதை அனைத்து ஜாம்பவான்களுமே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்நிலையில், அம்பயர்களின் மோசமான செயல்பாடுகளை நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள ஸ்காட் ஸ்டைரிஸ், அம்பயர்கள் படுமோசமாக செயல்படுவதில், கிரிக்கெட்டை தவிர வேறு விளையாட்டு ஏதும் இருக்கிறதா? என்று நறுக்குனு கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டைரிஸின் இந்த டுவீட்டை நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் லைக் செய்துள்ளார்.