Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வெல்லும் சவுராஷ்டிரா.. போராடிய பெங்காலை பொட்டளம் கட்டிய உனாத்கத்

சவுராஷ்டிரா அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வது உறுதியாகிவிட்டது. 
 

saurashtra confirms maiden ranji trophy
Author
Rajkot, First Published Mar 13, 2020, 11:19 AM IST

ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் ஆடிவருகின்றன. ராஜ்கோட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி முன்னிலை பெற்றது. 

ரஞ்சி தொடரின் இறுதி போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி தான் கோப்பையை வெல்லும். எனவே முதல் இன்னிங்ஸில் எப்படியாவது அதிக ரன்களை அடித்துவிட வேண்டும் என்பதற்காக சவுராஷ்டிரா அணி படுமந்தமாக பேட்டிங் ஆடியது. 

 இரண்டு நாட்கள் முழுவதும் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி,  மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மொத்தமாக 172 ஓவர்கள் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி 425 ரன்கள் மட்டுமே அடித்தது. 

saurashtra confirms maiden ranji trophy

அந்தளவிற்கு படுமந்தமாக பேட்டிங் ஆடினர் அந்த அணி வீரர்கள். குறிப்பாக புஜாராவின் பேட்டிங் படுமோசம். மொத்தமாக 237 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 66 ரன்கள் மட்டுமே அடித்தார் புஜாரா. அர்ப்பித் வசவடா 287 பந்துகளில் 106 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய், பரோட் ஆகியோரும் கூட படுமந்தமாக ஆடினர். முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திய சவுராஷ்டிரா அணி, 172 ஓவர்களில் 425 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பெங்கால் அணி, சவுராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் பாணியிலேயே பதிலடி கொடுத்தது. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பெங்கால் அணி பேட்டிங் ஆடியது. . 

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களிலும் மனோஜ் திவாரி 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, பெங்கால் அணி, 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னர் சுதிப் சட்டர்ஜியும் ரிதிமான் சஹாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு சஹாவும் சட்டர்ஜியும் இணைந்து 101 ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். சட்டர்ஜி 241 பந்தில் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 64 ரன்களுக்கு சஹாவும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அனுஸ்துப் மஜூம்தர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடினர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் அடித்திருந்தது. 

பெங்கால் அணியின் கையில் 4 விக்கெட்டுகள் இருந்த நிலையில், கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வெறும் 72 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத்தின் அருமையான பவுலிங்கின் விளைவாக, 381 ரன்களுக்கே பெங்காலை சுருட்டியது சவுராஷ்டிரா. கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மஜூம்தரை 63 ரன்களுக்கு வீழ்த்திய உனாத்கத், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆகாஷ் தீப்பை ரன் அவுட் செய்தார். அர்னாப் நந்தி ஒருமுனையில் நிலைத்து நின்று 40 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க, முகேஷ் குமார் மற்றும் இஷான் போரெல் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டான இஷான் போரெலையும் உனாத்கத் தான் வீழ்த்தினார். 

saurashtra confirms maiden ranji trophy

Also Read - இந்தியா vs தென்னாப்பிரிக்கா.. காலி ஸ்டேடியத்தில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள்

முதல் இன்னிங்ஸ் முடிவில் 44 ரன்கள் முன்னிலை பெற்ற சவுராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்த போட்டி டிராவில் முடிவது உறுதியாகிவிட்டதால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த சவுராஷ்டிரா அணிக்குத்தான் ரஞ்சி கோப்பை என்பது உறுதியாகிவிட்டது. சவுராஷ்டிரா அணி ரஞ்சி கோப்பையை வெல்வது இதுதான் முதல் முறை. உனாத்கத்தின் கேப்டன்சியில் சவுராஷ்டிரா அணிக்கு ரஞ்சி கோப்பை கனவு நனவாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios