பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன் இம்ரான் கான். 1971ம் ஆண்டிலிருந்து 1992ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடிய இம்ரான் கான், 88 சர்வதேச டெஸ்ட் மற்றும் 175 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங், அருமையான பேட்டிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த இம்ரான் கான், மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவரது கேப்டன்சியில் தான் 1992ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான இம்ரான் கான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 362 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 182 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தான இம்ரான் கான், தற்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்து நாட்டை ஆண்டுவருகிறார். இந்நிலையில், இம்ரான் கான் போதைக்கு அடிமையானவர் என அவருடன் ஆடிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் நவாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சர்ஃபராஸ் நவாஸ், இம்ரான் கான் கஞ்சா அடித்திருக்கிறார். லண்டனிலும் என் வீட்டிலும் கூட அவர் அதை செய்திருக்கிறார். 1987ல் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சரியாக பந்துவீசவில்லை. அவர் என் வீட்டிற்கு வந்தபோது, மோசின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் கஞ்சா அடித்ததாக கூறினார். அவரை என் முன்னால் வந்து இவையெல்லாம் பொய் என மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். நான் மட்டுமல்ல; இதற்கு இன்னும் பலரும் சாட்சி என்று சர்ஃபராஸ் நவாஸ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.