மும்பை வீரர் சர்ஃபராஸ் கான், ரஞ்சி தொடரில் வேற லெவலில் ஆடிவருகிறார். உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி முச்சதம் அடித்து அசத்தினார். சர்ஃபராஸின் சிறப்பான பேட்டிங்கால், உத்தர பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் அடித்தும் கூட போட்டி டிரா ஆனது. 

இந்நிலையில், தற்போது ஹிமாச்சல் அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் இரட்டை சதமடித்து, மீண்டும் முச்சதத்தை எதிர்நோக்கி களத்தில் உள்ளார். 

மும்பை மற்றும் ஹிமாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டி தர்மசாலாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ஹிமாச்சல் அணி, பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

மும்பை அணியின் டாப் ஆர்டர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. 16 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளையும் 71 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது மும்பை அணி. அதன்பின்னர் சர்ஃபராஸ் கானும் கேப்டன் ஆதித்ய தரேவும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே சிறப்பாக ஆடினர். சர்ஃபராஸ் கான் சிறப்பாக ஆடி சதமடித்த நிலையில், அரைசதம் அடித்த ஆதித்ய தரே 62 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து சர்ஃபராஸ் கானுடன் ஷுபம் ரஞ்சன் ஜோடி சேர்ந்தார். சர்ஃபராஸ் கானுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் ஷுபம் ஒருமுனையில் ஆட, மறுமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசி இரட்டை சதமடித்து அசத்தினார் சர்ஃபராஸ் கான். 

Also Read - இந்தியாவுக்கு நிகரான எதிரியே இல்ல.. தனி ராஜ்ஜியம்தான்.. ஓவரா சொம்பு தூக்கும் ஷோயப் அக்தர்

கடந்த போட்டியில் முச்சதம் அடித்த சர்ஃபராஸ் கான், இந்த போட்டியிலும் முச்சதமடிக்கும் முனைப்பில் ஆடினார். ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் அடித்துள்ளது. சர்ஃபராஸ் கான் 226 ரன்களுடன் களத்தில் உள்ளார். 213 பந்தில் 226 ரன்களை விளாசி சர்ஃபராஸ் கான், 100க்கு அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் களத்தில் உள்ளார். 

ஐபிஎல்லில் 2015 முதல் 2018 வரை ஆர்சிபி அணியில் ஆடிய சர்ஃபராஸ் கானை அந்த அணி கடந்த சீசனில் கழட்டிவிட்டது. ஆர்சிபி அணி ஃபிட்னெஸ் இல்லாத காரணத்தால் தன்னை கழட்டிவிட்டபோது மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும், ஃபிட்னெஸை மேம்படுத்தியே தீர வேண்டும் என தன்னிடம் விராட் கோலி கூறியதாகவும் சர்ஃபராஸ் தெரிவித்துள்ளார். 

உன் திறமையின் மீது எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் நீ உன் ஃபிட்னெஸை நீ மேம்படுத்தியே தீர வேண்டும் என்று கோலி என்னிடம் சொன்னார். அதன்பின்னர் ஃபிட்னெஸில் முழு கவனம் செலுத்தினேன் என்று சர்ஃபராஸ் கூறியுள்ளார்.