பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும், ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமானவர் ஷோயப் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று பாகிஸ்தான் ரசிகர்களால் அழைக்கப்படும் அக்தர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். 

தனது யூடியூபில் இந்திய கிரிக்கெட்டை வெகுவாக புகழ்ந்துவரும் அவர், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதலிரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கையும், இந்திய அணி, நியூசிலாந்து அணி மீது அதன் சொந்த மண்ணில் செலுத்திய ஆதிக்கத்தையும் வெகுவாக புகழ்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், இந்திய அணி மிகச்சிறந்த அணியாக எதிரணிகளின் மீது இரக்கமே இல்லாத வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இதை, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மீண்டும் நிரூபித்தது இந்திய அணி. நியூசிலாந்து அணியை இவ்வளவு குறைவான ஸ்கோரில்(132 ரன்கள்) சுருட்டியது. இப்படியொரு மொக்கை ஸ்கோருக்கு சுருண்டால், பேட்டிங் டெப்த் கொண்ட இந்திய அணியை எப்படி வீழ்த்த முடியும். 

இந்திய பவுலர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களின் தலையை குறிவைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி மிரட்டுகின்றனர். பும்ராவிடமும் ஷமியிடமும் இதுபோன்ற உச்சபட்ச நம்பிக்கையான பந்துவீச்சை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. நியூசிலாந்து வீரர்கள் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். ஜடேஜா, நியூசிலாந்து வீரர்களை ரன் அடிக்கவே அனுமதிக்கவில்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கும் விதமாக பந்துவீசினார். 

தற்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி, தனக்கு நிகரான அணியே இல்லாத அளவிற்கு ஒருதலைபட்சமாக ஆதிக்கம் செலுத்திவருகிறது. மற்ற அணிகளுக்கு என்னதான் ஆயிற்று? உலக கிரிக்கெட்டுக்கு என்ன ஆச்சு? ஆஸ்திரேலிய அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது கூட, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவிற்கு டஃப் கொடுக்கும் விதமாக கடும் போட்டியை அளித்தது. ஆனால் இப்போது நியூசிலாந்து அணி, அதன் சொந்த மண்ணில் இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்துள்ளது என்று அக்தர் தெரிவித்தார்.