சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தாலும் அதன்பின்னர் அனைத்துவிதமான போட்டிகளிலும் சொதப்பிவந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே படுமோசமாக சொதப்பி அதளபாதாளத்தில் கிடக்கிறது அந்த அணி. 

இதற்கிடையே, உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து, சர்ஃபராஸ் அகமதுவை கேப்டன்சியிலிருந்து நீக்கி அவரது சுமையை குறைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக இருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்த நெருக்கடியை சர்ஃபராஸால் கையாள முடியாமல் தவிப்பதோடு, அது அவரது பேட்டிங்கையும் பாதிக்கிறது. எனவே சர்ஃபராஸின் நெருக்கடியை குறைக்கும் விதமாக டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து அவரை நீக்கி, அவரது நெருக்கடியை குறைத்தால்தான் அவரால் சிறப்பாக ஆடமுடியும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.

ஆனாலும் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக், சர்ஃபராஸ் மீது நம்பிக்கை வைத்து அவரே கேப்டனாக தொடர்வார் என தெரிவித்தார். ஆனால் டி20 ஃபார்மட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் கூட, நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, முக்கியமான வீரர்கள் இல்லாத இலங்கை அணியிடம் டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், சர்ஃபராஸ் அகமது டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அசார் அலியும் டி20 அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டனை நியமிப்பது, எந்த வீரருக்காக இருந்தாலும் அழுத்தத்தை அதிகரிக்கத்தான் செய்யும். எனவே வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமித்துள்ளது. விராட் கோலி, ஸ்மித் போன்ற திறமையான, மனவலிமையுடய வீரர்கள், கேப்டன்சியால் ஏற்படும் அழுத்தம், பேட்டிங்கை பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொண்டு, இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுவிடுவார்கள். ஆனால் எல்லாராலும் அது முடியாது. அதனால்தான் வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமித்துள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் இந்த வியூகம் எந்தளவிற்கு பலனளிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.