உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு சிறந்ததாக அமையவில்லை. 

முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோலியடைந்தது. 

இந்திய அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பவுலிங் தேர்வு செய்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர். கேப்டன் சர்ஃபராஸின் ஃபிட்னெஸை ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்த அக்தர், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து சர்ஃபராஸை மேலும் கடுமையாக விமர்சித்தார். 

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை மூளையில்லாத கேப்டன் என்று கடுமையாக விமர்சித்தார் அக்தர். சர்ஃபராஸ் அகமதுவின் களவியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

பாகிஸ்தான் அணியை மேம்படுத்த பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் வலியுறுத்தினார். ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழுவை கலைக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். 

அந்தளவிற்கு பாகிஸ்தான் அணி மீதான அதிருப்தியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படுத்தினர். அனைவரையும் மிஞ்சுமளவிற்கு விமர்சித்ததில் அக்தர் தான் டாப்.

இந்நிலையில், தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, அக்தருக்கு பதிலடி கொடுத்தார். அக்தரின் விமர்சனத்துக்கு நான் பதில் சொன்னால், அவர் மீண்டும் எங்களை திட்ட ஆரம்பித்துவிடுவார். அதனால் அவரை பொறுத்தவரை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகிறோம். எங்கள் அணியை பற்றி நான் அவருக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. சில பேர் டிவியில் உட்கார்ந்துகொண்டு தங்களை கடவுள் என்று நினைத்துக்கொள்கிறார்கள் என்று பதிலடி கொடுத்தார். 

அக்தருக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்க சர்ஃபராஸ் பயப்படுகிறார். ஏனெனில் இவர் ஏதாவது சொல்லப்போய், அதற்கு அக்தர் மீண்டும் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டார் என்றால் நன்றாக இருக்காது. எனவே அக்தரிடம் மேலும் அசிங்கப்பட வேண்டாம் என்பதற்காக நாசூக்காக நழுவிவிட்டார் சர்ஃபராஸ்.