Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை எடுத்ததற்கு இதுதான் காரணம் மிஸ்டர் சாஸ்திரி - முன்னாள் தேர்வாளர் அதிரடி

2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 

sarandeep singh replies ravi shastri that why selectors picked 3 wicket keepers in india squad for 2019 odi world cup
Author
Chennai, First Published Dec 13, 2021, 10:52 PM IST

2019 ஒருநாள் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. அந்த உலக கோப்பையில், லீக் போட்டிகளில் டாப் ஆர்டர் வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியதால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி  போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழந்ததால், மிடில் ஆர்டர் சிக்கல் பெரும் பிரச்னையாக அமைந்து, அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இருந்தது அணி நிர்வாகத்திற்கும், தேர்வாளர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் தான் 2017லிருந்தே பல வீரர்கள் மிடில் ஆர்டரில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான், 4ம் வரிசை வீரர் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கடைசி நேரத்தில் 3டி வீரர் என்று கூறி விஜய் சங்கரை அணியில் எடுத்தனர் தேர்வாளர்கள். ராயுடுவின் புறக்கணிப்பு அனைத்து தரப்பினருக்கும் கடும் அதிர்ச்சியளித்தது.

ரவி சாஸ்திரிபயிற்சியாளராக இருந்த சமயத்தில் இந்திய அணி தேர்வு மிகக்கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமை தேர்வாளராக இருந்தபோது செய்யப்பட்ட அணி தேர்வுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், சில தேர்வுகள், சில புறக்கணிப்புகள் விசித்திரமாகவும் புரியாத புதிராகவும் இருந்தன. அவை இந்திய அணிக்கு பாதிப்பாகவும் அமைந்தன. அந்தவகையில், அப்படியான சர்ச்சைக்குரிய புறக்கணிப்பு, 2019 உலக கோப்பைக்கான அணியில் ராயுடு புறக்கணிக்கப்பட்டதுதான். 

ஆனால் எந்த மிடில் ஆர்டர் பிரச்னைக்காக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்ததோ, அதற்கு பலனே இல்லாத வகையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 240 ரன்களை விரட்ட முடியாமல் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது.

அந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் எடுக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காலத்தை முடித்துவிட்ட ரவி சாஸ்திரி அந்த சர்ச்சைக்குரிய தேர்வு குறித்து அண்மையில் பேசினார். அப்போது, உலக கோப்பைக்கான அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. ராயுடு - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் கண்டிப்பாக அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தோனி - ரிஷப் - தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையும் அணியில் எடுப்பதில் என்ன லாஜிக்? ஆனால் நான் ஒருபோதும் தேர்வாளர்களின் பணியில் குறுக்கிட்டதில்லை. அணி தேர்வு குறித்து என்னை கேட்டால் மட்டுமே எனது கருத்தை கூறுவேனே தவிர, நானாக சென்று எதையும் சொல்லமாட்டேன் என்று சாஸ்திரி கூறினார்.

இந்நிலையில், சாஸ்திரியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார் அப்போதைய தேர்வாளர்களில் ஒருவரான சரண்தீப் சிங், 3 விக்கெட் கீப்பர்களுமே சிறந்த பேட்ஸ்மேன்கள். ஷிகர் தவான் காயத்தால் வெளியேறியதால் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார். தொடக்க வீரர் கேஎல் ராகுல் இருந்ததால், மிடில் ஆர்டரில் அடித்து ஆட ஒரு வீரர் தேவை என்ற வகையில் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டார். ஆனால் ஆடும் லெவனை தேர்வு செய்வது அணி நிர்வாகத்தின் தேர்வு. அதில் தேர்வாளர்கள் தலையிடமுடியாது. நாங்கள் தேர்வாளர்களாக எங்களது பணியை சரியாகத்தான் செய்தோம் என்று சரண்தீப் சிங் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios