டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டேவிட் மில்லர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றி நம்பிக்கை அளித்தாலும், வெற்றி பெற வைத்தது என்னவோ கிறிஸ் மோரிஸ் தான்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 16வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள், கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, 18 பந்தில் 36 ரன்களை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோரிஸுக்கு சஞ்சு சாம்சன் சிங்கிள் ஓட மறுத்தது விவாதக்களமானது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் 2 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், சதமடித்து களத்தில் இருந்த சஞ்சு சாம்சன், 5வது பந்தில் பெரிய ஷாட் ஆடாத நிலையில், மறுமுனையில் நின்ற கிறிஸ் மோரிஸுக்கு சிங்கிள் ஓட மறுத்தார். அதனால் கிட்டத்தட்ட பேட்டிங் க்ரீஸ் வரை சென்ற மோரிஸ், திரும்பிவந்தார். அதனால் கடைசி பந்தில் சாம்சன், சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயம் உருவானது. அது முடியாமல் அந்த அணி தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய ஆல்ரவுண்டராக மதித்து ரூ.16.25 கோடிக்கு  ஏலத்தில் எடுத்த மோரிஸ் மீது நம்பிக்கை வைக்காமல் சிங்கிள் மறுத்தார் சாம்சன். தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்ததால், தன்னால் தான் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் சாம்சன் சிங்கிளை மறுத்தார். அந்த சூழலில் சாம்சன் செய்தது சரிதான் என்றாலும், டெல்லிக்கு எதிராக மோரிஸ் மேட்ச் வின்னிங் பேட்டிங் ஆடியதையடுத்து, பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சாம்சன் சிங்கிள் மறுத்தது ரசிகர்கள் மத்தியில் விவாதக்களமாக மாறியது.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த சஞ்சு சாம்சன், பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் அந்த குறிப்பிட்ட சூழலில் சிங்கிள் எல்லாம் ஓடமுடியாது. குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் நன்றாக ஆடும் பேட்ஸ்மேன் தான், தொடர்ந்து ஆடி போட்டியை ஜெயிக்க ஆடவேண்டும். இதில் ஈகோவிற்கு எல்லாம் இடமே இல்லை. அந்த சூழலில் சிங்கிள் தேவைப்படவேயில்லை. போட்டியை ஜெயிப்பதுதான் முக்கியமே தவிர, ஈகோவெல்லாம் இல்லை என்று சாம்சன் தெரிவித்தார்.