இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன் கடைசி 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்றார். 

இந்த 2 போட்டிகளிலும் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் பேட்டிங்கில் சொதப்பினார் சஞ்சு சாம்சன். நான்காவது போட்டியில் அருமையான ஒரு சிக்ஸர் அடித்த சாம்சன், அதே ஓவரில் மற்றுமொரு சிக்ஸர் அடிக்க நினைத்து 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி போட்டியில் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சொதப்பினாலும் ஃபீல்டிங்கில் மிரட்டிவிட்டார். குறிப்பாக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் அவரது ஃபீல்டிங் அபாரம். இந்த போட்டியில் டிம் சேஃபெர்ட்டின் கேட்ச்சை பிடித்த சாம்சன், டாம் ப்ரூஸை ரன் அவுட்டாக்கினார். இந்திய அணி நிர்ணயித்த 164 ரன்கள் என்ற எளிய இலக்கை நியூசிலாந்து விரட்டியபோது, 8வது ஓவரில் அபாரமாக ஃபீல்டிங் செய்து அசத்தினார். 

ஷர்துல் தாகூர் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்தை டெய்லர், மிட் விக்கெட் திசையில் தூக்கியடித்தார். சிக்ஸருக்கு சென்ற அந்த பந்தை சஞ்சு சாம்சன் அபாரமாக டைவ் அடித்து பிடித்தார். ஆனால் பவுண்டரி லைனிற்குள் விழ நேர்ந்ததால், அவரது உடம்பு காற்றில் இருந்தபோதே பந்தை தூக்கி மைதானத்திற்குள் போட்டார். அதற்கு நியூசிலாந்து வீரர்கள் 2 ரன்கள் மட்டுமே ஓடினர். தனது அசத்தலான ஃபீல்டிங்கின் மூலம் இந்திய அணிக்கு 4 ரன்களை காப்பாற்றி கொடுத்தார் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சன் டைவ் அடித்தது, கேட்ச் பிடித்தது, பின்னர் தூக்கி போட்டது என எல்லாமே செம டைமிங். கொஞ்சம் கூட டைமிங் மிஸ் ஆகாமல் இந்த 3 பணிகளையும் பக்கா டைமிங்கில் செய்தார் சாம்சன். அந்த வீடியோ இதோ.. 

 

via Gfycat

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 156 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.