இந்திய அணியில் 2004ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் தோனி, கேப்டனாக இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 2019 உலக கோப்பைக்கு பிறகு தோனி இந்திய அணியில் மட்டுமல்ல; எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. 

ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாத தோனியின் பெயர், பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் விடுவிக்கப்பட்டது. தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அவரது கெரியர் முடிந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. தோனி இந்திய அணிக்காக அவரது கடைசி போட்டியை ஆடிவிட்டார் என்றே பலர் கருதுகின்றனர்.

ஆனால் தோனி அதுகுறித்து வாயே திறக்காமல் மௌனம் காத்துவருகிறார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 13வது சீசன், வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு 3 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி, 4வது முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பதுடன், 2021ல் இந்தியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற, ஐபிஎல்லை பயன்படுத்தி கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தோனி அவரது ஓய்வு குறித்து 2017ல் நடந்த கோலி திருமணத்தின்போதே பகிர்ந்துகொண்டதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், விராட் கோலி திருமணத்தில் தோனியிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவரிடம் பேசுகையில், மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியும் வரை, நான் ஃபிட்டாக இருப்பதாக நினைப்பேன்; அதுவரை ஆடுவேன் என்று தோனி கூறியதாக தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், அப்படியான பவுலர்களை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த மாதிரி மிகச்சிறந்த பவுலர்களில் சிலர் தான் ஐபிஎல்லில் ஆடவுள்ளனர். அவர்களை கண்டிப்பாக தோனி பிரித்து மேய்ந்துவிடுவார் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.