உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

உலக கோப்பையில் இந்திய அணியின் நான்காம் வரிசை வீரர் குறித்த கருத்துகள் இன்னும் தெரிவிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. நான்காம் வரிசையை கருத்தில் கொண்டு விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் தேவைக்கேற்ப இருவரில் இருவரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற வகையில் அணி தேர்வு இருந்தது. 

பல முன்னாள் வீரர்களும் நான்காம் வரிசை குறித்த தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். சிலர் விஜய் சங்கருக்கு ஆதரவாகவும், சிலர் கேஎல் ராகுலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், விஜய் சங்கர் பயிற்சியின் போது காயமடைந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் ஆடவில்லை. அதனால் நான்காம் வரிசையில் ராகுல் களமிறங்கினார். 

ரோஹித்தும் தவானும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டதால் 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ராகுல், பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பையும் 4ம் வரிசையில் அவரது இடத்தை தக்கவைப்பதற்கான அரிய வாய்ப்பையும் தவறவிட்டார். 

இந்நிலையில், நான்காம் வரிசை குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், விஜய் சங்கர் நான்காம் வரிசையில் ஆடலாம். அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடுகிறார். ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். மிகவும் அரிதாக நான்காவது வரிசையில் இறங்குபவர். மிடில் ஆர்டரில் ஆடும் வீரர் ஸ்டிரைக் ரொடேட் செய்வதுடன் ஸ்பின் பவுலிங்கையும் நன்றாக ஆடக்கூடியவராக இருக்க வேண்டும். 20/2 அல்லது 220/2 என்று எந்த நிலையாக இருந்தாலும் விஜய் சங்கரை இறக்கலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.