இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான அணிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், ஐசிசி தொடர்கள் எதுவும் வென்றதில்லை. ஆனால் விராட் கோலி ஒரு கேப்டனாக, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை முன்னின்று வழிநடத்துகிறார். அவரிடம் இருக்கும் வெற்றி வேட்கையும் நேர்மறையான சிந்தனையும் அணி முழுவதும் நேர்மறையான அதிர்வலைகளை கடத்துகிறது.

ஆனால் விராட் கோலி மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டன்சி செய்வதால் அவருக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது. அவர் மீதான அழுத்தத்தை குறைக்கும் விதமாக, டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் வழங்கலாம் என கிரன் மோர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதேவேளையில், ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளதுடன், ஆசிய கோப்பை, நிதாஹஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். எனவே கேப்டன்சி பொறுப்புக்கு தகுதியான ரோஹித்திடம் டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பை வழங்கலாம் என்ற கருத்து உள்ளது.

ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர்,  கேப்டன்சியை பிரித்து வழங்க வேண்டிய அவசியமில்லை. கோலி மாதிரி ஒரு வீரர் அணியின் கேப்டனாக இருப்பது அணிக்கு நல்லது. மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடுவதுடன், அணியையும் சிறப்பாக வழிநடத்துகிறார். எனவே அவரே, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான அணிகளையும் வழிநடத்தலாம்.

இப்போதைக்கு 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான வீரர் மற்றும் கேப்டனாக கோலி இருக்கிறார். அதனால் கேப்டன்சியை பிரித்து வழங்குவதற்கான அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படியொரு சூழல் ஏற்படலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.