உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

உலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் கூட அடிக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தெரிவித்துள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது. 

ஹை ஸ்கோரிங் ஆட்டங்களை பொறுத்தமட்டில், ஹை ஸ்கோரை எட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியான பேட்டிங்கும், எதிரணியை ஹை ஸ்கோர் அடிக்காமல் தடுக்க பவுலர்களின் சிறப்பான பவுலிங்கும் அவசியம். இந்த இரண்டுமே இந்திய அணியிடம் உள்ளது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரில் கூட, ஒவ்வொரு போட்டியிலும் 340 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. எனவே இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ள நிலையில், எவ்வளவு பெரிய இலக்கையும் ஒருநாள் போட்டிகளில் எட்டலாம். ஆனால் எப்படி ஆட வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஒருநாள் போட்டிகளில் எவ்வளவு கடினமான இலக்கையும் விரட்டிவிடலாம். ஆனால் அதற்கு அவசரப்படாமல் தேவைப்படும் ரன்ரேட்டை நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி சேர்க்க வேண்டும். அந்த விஷயத்தில் இந்திய அணியில் விராட் கோலி மட்டுமே சிறந்தவர். நெருக்கடியான சூழல்களிலும் அவசரப்பட்டு காற்றில் தூக்கி அடிக்காமல் தரையை ஒட்டி அடித்தே ரன்களை சேர்ப்பார். காற்றில் தூக்கி அடித்து விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடுவதால்தான் கோலி தொடர்ந்து ரன்களை குவித்துகொண்டே இருக்கிறார். சிக்ஸரே அடிக்காமல் எவ்வளவு கடினமான இலக்கையும் ஒருநாள் போட்டியில் விரட்டமுடியும். ரிஸ்க்கே இல்லாமல் ஒரு ஓவரில் 8 ரன்களை சேர்க்க முடிந்தால் போதும்.

ஆனால் இந்திய அணியில் இந்த திறமையும் பொறுமையும் விராட் கோலியிடம் மட்டுமே உள்ளது. ரோஹித், தவான், ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோரை சில பந்துகள் அடிக்கவிடாமல் செய்துவிட்டால் போதும். அவர்களாகவே ரிஸ்க்கி ஷாட் அடித்து ஆட்டமிழந்துவிடுவார்கள். ஆனால் கோலி அவ்வாறு செய்யமாட்டார். கோலியை போல் ஆடினால் எவ்வளவு கடினமான இலக்கையும் விரட்டலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.