உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகும் பாண்டியா தான் அனுப்பப்பட்டார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்டை தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கம். 

கவாஸ்கர், கங்குலி என பலரும் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கி ரிஷப்புடன் ஆடவிட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி செய்திருந்தால் விக்கெட் இழப்பு ஏற்பட்டிருக்காமல் பார்ட்னர்ஷிப் அமைந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இதுதான். முன்னாள் ஜாம்பவான்கள் அனைவருமே, தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அந்த முடிவை தவறானது என்று கூறினாலும் வழக்கம்போலவே அந்த முடிவை நியாயப்படுத்தினார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. தோனியை ஏழாம் வரிசையில் இறக்காமல் முன்கூட்டியே இறக்கியிருந்தால் மொத்த விரட்டலும் செத்து போயிருக்கும் என்று கூறி அந்த முடிவை நியாயப்படுத்தினார். 

ஆனால் தோனியை பின்வரிசையில் இறக்கியதிலும் யாருக்கும் உடன்பாடில்லை. ரவி சாஸ்திரியின் விளக்கத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியதுதான் சேஸிங்கை கெடுத்தது என்பதில் சந்தேகமில்லை. 

அந்த முடிவை எடுத்தது யார் என்பதை பலரும் வலைவீசி தேடிக்கொண்டிருந்த நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தான் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது என்ற ஒரு தகவல் வெளிவந்து வைரலாக பரவியது. இந்த தகவலை அடுத்து ரசிகர்களின் தூற்றல்களுக்கும் பங்கார் ஆளானார். 

இந்நிலையில், அதுகுறித்து சஞ்சய் பங்கார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் பங்கார், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சூழலுக்கு ஏற்ப களமிறக்குவதுதான் திட்டமே. அனைவரும் கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தோம். அனுபவம் வாய்ந்த தோனி, வெற்றிகரமாக முடித்துவைக்க தேவை என்பதாலேயே அவரை ஏழாம் வரிசையில் அனுப்பினோம். ஆனால் அதை நான் ஒருவனே தனியாக எடுத்த முடிவு போல பேசுவது எப்படியென்று எனக்கே புரியவில்லை. அது நான் ஒருவன் மட்டும் எடுத்த முடிவுபோல சித்தரிக்கக்கூடாது என்று சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.