Asianet News TamilAsianet News Tamil

ஷ்ரேயாஸ் ஐயர் இப்ப வந்தவன்ப்பா.. அந்த பையனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்..! முன்னாள் கோச் அதிரடி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயரைவிட ஹனுமா விஹாரிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

sanjay bangar opines hanuma vihari deserves a place in india test team ahead of shreyas iyer in south africa series
Author
Chennai, First Published Dec 13, 2021, 10:03 PM IST

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது. மும்பையில் நேற்றிலிருந்து(டிசம்பர் 12) பபுளில் இருக்கும் இந்திய அணி, வரும் 16ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு செல்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் யார் இறங்கப்போவது என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. ரோஹித் சர்மா காயத்தால் தொடரிலிருந்து விலகிவிட்டதால் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் புஜாரா ஆடுவார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பபுளில் இணையாததால் அவர் தென்னாப்பிரிக்கா செல்வது சந்தேகம் தான். எனவே கோலி ஆடவில்லை என்றால், அந்த இடத்தில் ரஹானே ஆட வாய்ப்புள்ளது.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 அல்லது 6ம் வரிசையில் இறங்குவார். இந்திய அணி மொத்தமாக 4 அல்லது 5 பவுலர்களுடன் களமிறங்கும். 5 பவுலர்களுடன் களமிறங்கினால் ஷ்ரேயாஸ் ஐயர் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் தான் ஆட வாய்ப்பு பெறுவார்.

ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்ற சூழல் உருவானால், ஹனுமா விஹாரிக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், ஷ்ரேயாஸ் ஐயர் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவரை எடுக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக ஹனுமா விஹாரியைத்தான் ஆடவைக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே அளித்த பங்களிப்பின் அடிப்படையில் அவருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் ஷ்ரேயாஸ் ஐயரை விட ஹனுமா விஹாரிதான் இந்திய அணிக்காக ஆட தகுதியானவர்.  கடினமான சூழல்களில், கண்டிஷன்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார் விஹாரி. வெஸ்ட் இண்டீஸில் சதமடித்திருக்கிறார்; சிட்னி டெஸ்ட்டில் ஆட்டத்தை காப்பாற்றி கொடுத்திருக்கிறார் என்றார் பங்கார்.

விஹாரி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். அவற்றில் 11 போட்டிகள் வெளிநாடுகளில் ஆடியவை. இந்த 11 போட்டிகளில் 32.84 என்ற சராசரியுடன் 624 ரன்கள் அடித்துள்ளார் விஹாரி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios