இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

இந்திய அணியின் முதல் 3 வீரர்கள்தான் அணிக்கு வலு சேர்த்துவந்தனர். இந்நிலையில் தவான் அண்மைக்காலாமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவது இந்திய அணியை வலுவிழக்க செய்வதாக அமைந்துள்ளது. தொடக்க வீரரான தவான் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவர் கடைசியாக ஆடிய 17 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 2 டக் அவுட்டுகள், 6 முறை ஒற்றை இலக்கங்கள் என மோசமாக சொதப்பியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலுமே சொதப்பினார். ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் 10 பந்துகளுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறினார். படுமோசமாக சொதப்பிவரும் தவான், இழந்த அவரது நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். ஆனால் அந்த ஒரு இன்னிங்ஸை சரியாக ஆடமுடியாமல் தவித்துவருகிறார் தவான். இந்திய அணியின் முதல் 3 வீரர்கள்தான் அணிக்கு வலு சேர்த்துவந்தனர். இந்நிலையில் தவான் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. 

தவான் சொதப்பிவரும் அதேவேளையில், மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பி அதிரடியில் மிரட்டிவருகிறார். ராகுல் ஃபார்முக்கு திரும்பிய நிலையில், ரோஹித் - ராகுலை தொடக்க வீரர்களாக உலக கோப்பையில் களமிறக்கிவிட்டு தவானை பென்ச்சில் உட்கார வைக்கலாம் என காம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார். 

தவானுக்கு பதில் ராகுலை அணியில் சேர்ப்பது குறித்த கருத்து பரவலாக உள்ளது. இந்நிலையில் தவானுக்கு ஆதரவாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் குரல் கொடுத்துள்ளார். தவான் குறித்து பேசிய சஞ்சய் பங்கார், தவான் சிறந்த வீரர். ஆனால் அவரது ஷாட் செலக்‌ஷனில் தவறிழைக்கிறார். அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும் அணியின் முக்கியமான வீரர் அவர். வலது-இடது கை பேட்டிங் இணை நல்லது. அந்த வகையில் ரோஹித்-தவான் ஜோடி சிறந்த ஜோடி. தவான் இந்திய அணியின் விலைமதிப்புமிக்க வீரர். அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்று நம்புகிறோம் என்று சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.