பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது ஸ்மித்தை  ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பை, அவசரத்தில் விதியை மறந்து இலங்கை வீரர் சந்தகன் தவறாக செயல்பட்டதால் ஸ்மித் தப்பினார். சந்தகன் வீசிய பந்தை வார்னர் ஸ்டிரைட்டாக அடித்தார். பந்து நேராக சென்று பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை அடித்தது. 

அந்த பந்தை வீசும்போதே ஸ்மித் ரன் ஓடுவதற்கு தயாராக கிரீஸை விட்டு வெளியேறியதால், வார்னர் அடித்த பந்து, பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை அடிக்கும்போது கிட்டத்தட்ட பாதி பிட்ச்சிற்கு சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்து, ஸ்டம்பில் படுவதற்கு முன் பவுலரின் கையில் படாததால் அது அவுட் இல்லை. 

ஆனாலும் ஸ்மித் பாதி பிட்ச்சில் நின்றதால், அவரை ரன் அவுட் செய்வதற்காக, ஸ்டம்பில் அடித்துவிட்டு கீழே கிடந்த பந்தை கையில் எடுத்தார் சந்தகன். வார்னர் அடித்த பந்து ஸ்டம்பில் பட்டதால், ஸ்டம்பில் இருந்த இரண்டு பெயில்களும் கீழே விழுந்தன. எனவே ஸ்மித்தை ரன் அவுட் செய்ய வேண்டுமென்றால், பந்தை கையில் எடுத்து அதே கையில் ஸ்டம்பை பிடுங்க வேண்டும். ஆனால் சந்தகன், அவசரத்தில் பந்தை வலது கையில் எடுத்துக்கொண்டு, ஸ்டம்பை இடது கையில் பிடுங்கினார். அது விதிப்படி தவறு. அதனால் ஸ்மித் தப்பினார். 

அதேமாதிரியான ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் உள்நாட்டு ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் நடந்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குயின்ஸ்லாந்து அணி 50 ஓவரில் 268 ரன்கள் அடித்தது. 269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை 242 ரன்களுக்கு சுருட்டி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குயின்ஸ்லாந்து அணி. 

இந்த போட்டியில் இலக்கை விரட்டிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கார்ட்ரைட்டும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த சம்பவம் போன்று நடந்தது. அப்போது கார்ட்ரைட் பந்தை அடித்துவிட்டு ரன் ஓடும்போது வழுக்கிவிட்டு கிழே விழுந்தார். அந்த பந்தை எடுத்து பவுலர் ரன் அவுட் செய்யப்போகும்போது, பவுலரின் கால் பட்டு ஸ்டம்பில் இருந்த இரண்டு பெயில்களும் கீழே விழுந்தன. இதையடுத்து அவர் பந்தை வைத்து ஸ்டம்பை தட்டியவாறு ஸ்டம்பை பிடுங்கினார். ஸ்டம்பில் உள்ள பெயில்கள் கீழே விழுந்தால், எப்படி ரன் அவுட் செய்ய வேண்டும் என்பதற்கு இந்த வீடியோவே உதாரணம்.. அந்த இரண்டு வீடியோக்களையும் பார்ப்போம்.

ஆஸ்திரேலிய உள்நாட்டு வீரர் செய்த ரன் அவுட் வீடியோ:

 

இலங்கை வீரர் சந்தகன் தவறாக செய்த ரன் அவுட் வீடியோ: