இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான சானத் ஜெயசூரியா இறந்துவிட்டதாக ஒரு தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இலங்கை அணியில் 1989ம் ஆண்டு அறிமுகமாகி 2011ம் ஆண்டு வரை ஆடியவர் ஜெயசூரியா. 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் ஜெயசூரியா. 2011ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். 

49 வயதான ஜெயசூரியா இறந்துவிட்டதாக திடீரென ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கனடாவிற்கு சென்றிருந்த ஜெயசூரியா விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த உண்மை தகவல் என்ன என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூட டுவீட் செய்திருந்தார். அஷ்வினை போலவே பல வீரர்களும் இதுகுறித்த உண்மை தன்மையை அறிந்துகொள்ள விளைந்தனர். 

இந்த தகவல் தனது நண்பர்கள் மூலமாக ஜெயசூரியாவுக்கு தெரியவர, உடனடியாக அது ஒரு வதந்தி என தெளிவுபடுத்தினார். தனது உடல்நிலை குறித்த தவறான தகவல் பரவியதால் தனது குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனை தெரிவித்துள்ள ஜெயசூரியா, இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.