Asianet News TamilAsianet News Tamil

Kohli vs BCCI: விராட் கோலி விவகாரத்தை பிசிசிஐ மிகவும் பக்குவமாக கையாண்டது..! பாக்., முன்னாள் வீரர் புகழாரம்

விராட் கோலி விவகாரத்தை பிசிசிஐ மிகவும் பக்குவமாகவும் சாதுர்யமாகவும் கையாண்டதாக சல்மான் பட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

salman butt praises bcci approach of virat kohli controversy
Author
Pakistan, First Published Dec 22, 2021, 4:22 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று பிசிசிஐ வலியுறுத்தியது. ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பிரஸ் மீட்டில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் விராட் கோலியின் பேச்சுக்கு பிசிசிஐ பதிலடி கொடுக்கவில்லை. மறுப்பு தெரிவித்து அறிக்கை கூட வெளியிடவில்லை. இப்போதைக்கு, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியில் நல்ல சூழல் நிலவுவது முக்கியம் என்பதால், அணியின் நலனை கருத்தில்கொண்டு அமைதியாக பொறுமையை கையாண்டது பிசிசிஐ.

பிசிசிஐயின் இந்த முதிர்ச்சியான செயலை சல்மான் பட் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய சல்மான் பட், இது சென்சிட்டிவான டாபிக். விராட் கோலிக்கு பதிலளித்திருந்தால் அது அனுபவமின்மையின் வெளிப்பாடாக இருந்திருக்கும். ஆனால் பிசிசிஐ அப்படி எதையும் செய்யவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அங்கு சிறப்பாக விளையாடி ஜெயிப்பதே முக்கியம் என்பதால், இந்த விவகாரத்தை பக்குவமாக கையாண்டது. தனிப்பட்ட முறையில் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும். ஆனால் ஊடகங்களுக்கு தீனியளிக்கும் விதமாக வெளிப்படையாக பிசிசிஐ எதையும் பேசவில்லை என்று சல்மான் பட் பிசிசிஐயின் செயல்பாட்டை பாராட்டி  பேசியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios