Asianet News TamilAsianet News Tamil

Virat vs Rohit: நீ வேற லெவல்ப்பா கோலி.. விராட் கோலியை வெகுவாக புகழ்ந்த பாக்., முன்னாள் வீரர்

இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் புதிய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறிய விராட் கோலியின் செயலை வெகுவாக பாராட்டியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.
 

Salman Butt lauds Virat Kohli for offering support to White-ball captain Rohit Sharma
Author
Chennai, First Published Dec 18, 2021, 8:35 PM IST

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கமுடியாது என்று கூறி ஒருநாள் அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் கோலியை நீக்கிவிட்டு ரோஹித்தையே கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.

ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத விராட் கோலி, கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு ரோஹித்தை நியமித்ததாக தகவல் வெளியானது. அதனால் பிசிசிஐ மீது கோலி அதிருப்தியில் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் கேப்டன்சியில் ஆட விரும்பாமல், அந்த தொடரிலிருந்து மகளின் பிறந்தநாளை காரணம் காட்டி விலக்கு கேட்டதாகவும் தகவல் வெளியானது.

கோலி ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டதாக வெளியான தகவல், ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற சர்ச்சைக்கு உரமூட்டியது. ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், கோலி ஒருநாள் தொடரில் ரோஹித்தின் கேப்டன்சியில் ஆடாமல் விலகுகிறார் என்று பேசப்பட்டது. ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே மோதல் முற்றியதாக பேசப்பட்டது.

ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற பேச்சு கடந்த 2-3 ஆண்டுகளாகவே இருந்துவந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு இடையே மோதல் என்று பேசப்பட்டது. ஆனால் ஒரே பிரஸ்மீட்டில் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலளித்தார் கோலி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவதை உறுதி செய்த கோலி, தனக்கும் ரோஹித்துக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்பதை இரண்டரை ஆண்டுகளாக சொல்லி சொல்லி சலித்துப்போய்விட்டதாகவும் கோலி தெரிவித்தார்.

மேலும் ரோஹித்தின் கேப்டன்சி குறித்து பேசிய விராட் கோலி, இந்திய அணியை சரியான வழியில் கொண்டுசெல்வது என்னுடைய பொறுப்பு. நான் கேப்டனாவதற்கு முன் என்ன செய்தேனோ, அதையே தான் இப்போதும் செய்யவுள்ளேன். என்னுடைய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. வியூகங்கள் வகுப்பதில் ரோஹித் மிகச்சிறந்த கேப்டன். இந்திய அணியை வழிநடத்தியபோதும், ஐபிஎல்லிலும் அதை நாம் பார்த்திருக்கிறோம். கேப்டன் ரோஹித்துக்கு எனது ஆதரவு 100 சதவிகிதம் இருக்கும் என்றும் கோலி உறுதியளித்தார்.

இந்நிலையில், விராட் கோலி இந்த விஷயத்தை அணுகிய விதத்தை சல்மான் பட் பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சல்மான் பட், விராட் கோலி விவேகமாக செயல்பட்டார். ரோஹித் - விராட் ஆகிய இருவருமே இந்திய அணியின் மேட்ச் வின்னர்கள்.  இவர்களை போன்ற பெரிய வீரர்கள் இந்த பிரச்னையை எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகியிருக்கிறார்கள். அது அணிக்கு நல்லது. ரோஹித் சர்மாவுக்கு விராட் கோலி அளித்த ஆதரவு மிகச்சிறப்பான செயல் என்று சல்மான் பட் பாராட்டி பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios