Asianet News TamilAsianet News Tamil

மண் வளத்தை காக்க உறுதி ஏற்போம்..! குடியரசு தின வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள்

‘நம் நாட்டின் மண் வளத்தை மீட்டெடுத்து, இந்தியாவை உலகளவில் வளமான பெருமைமிகு நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
 

sadhguru republic day message to people to save soil prosperity
Author
Coimbatore, First Published Jan 25, 2022, 5:36 PM IST

‘நம் நாட்டின் மண் வளத்தை மீட்டெடுத்து, இந்தியாவை உலகளவில் வளமான பெருமைமிகு நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி

தமிழ் மக்கள் அனைவருக்கும் 73-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். நம் பாரத தேசம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது. அதேசயம், நம் தேசம் ஜனநாயக ரீதியிலான குடியரசு ஆட்சி முறைக்கு மாறி வெறும் 73 ஆண்டுகள் தான் ஆகிறது. அந்த வகையில் நாம் இளமையான தேசமாக இருக்கிறோம். இளமை என்றாலே அது அபாரமான சக்தியை குறிக்கும். இந்த சக்தியை நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி விழிப்புணர்வான செயல்கள் மூலம் உலகின் முக்கியமான, பெருமைமிகு நாடாக இந்தியாவை மாற்றிக்காட்ட வேண்டும். மேலும், உலகளவில் வளமான நாடாகவும் மாற்றிக்காட்ட வேண்டும்.

பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், அந்நாட்டில் உள்ள மண் வளமாக இருக்க வேண்டும். மண்ணில் இருக்கும் உயிர் சக்தி போய்விட்டால், ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது. துர்திருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கி தான் நம் தேசம் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த அவல நிலையை மாற்றி நம் தாய் மண்ணை காப்பதற்காக ‘கான்சியஸ் பிளானட்’ என்ற உலகளவிலான இயக்கத்தை நாங்கள் இந்தாண்டு தொடங்க இருக்கிறோம். உலகில் உள்ள 192 நாடுகள் மண் வளத்தை காப்பதற்கு தேவையான சட்டங்களை இயற்ற இவ்வியக்கத்தின் மூலம் வலியுறுத்த உள்ளோம். உலகளவிலான இவ்வியக்கத்தில் இந்தியாவில் இருக்கும் இளைஞர்களும், அனைத்து குடிமக்களும் பங்கெடுத்து இதை வழிநடத்தி செல்ல வேண்டும். ஏனென்றால், மனித விழிப்புணர்வு மற்றும் மனித அமைப்பின் செயல்முறைகள் குறித்து மிக ஆழமாக புரிந்துகொள்வதில் பாரத கலாச்சாரத்தை போன்று, வேறு எந்த கலாச்சாரமும் அதிக கவனம் செலுத்தியது கிடையாது. இது பல வகையில் நம் பலமாகவும் உள்ளது.

ஆகவே, விழிப்புணர்வான உலகை உருவாக்கும் இச்செயலில் தமிழ் மக்கள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது என் விருப்பம். இந்த குடியரசு தின நாளில் நம் மண்ணை வளமாக வைத்து கொள்ளவும், இந்த தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நலமான வாழ்வு வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios