உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அரையிறுதியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்திய அணியில் ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் இருக்கிறார். ராகுலும் சிறப்பாக ஆடிவருகிறார். விராட் கோலியை பற்றி சொல்லவே தேவையில்லை. மிடில் ஆர்டரிலும் ரிஷப் பண்ட், ஹர்திக், தினேஷ் கார்த்திக் என பெரும் அதிரடி படையே உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. 

ஆனாலும் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. ஜடேஜா அணியில் எடுக்கப்படுவாரா, ஷமி - புவனேஷ்வர் குமாரில் யார் சேர்க்கப்படுவார் என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. ஷமி 4 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆனாலும் ஷமி இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் அதிகமான ரன்களை வாரிவழங்கினார். 

எனவே முக்கியமான அரையிறுதி போட்டியில் இந்திய அணி எந்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியுடன் ஆடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டிய காம்பினேஷன் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று சச்சின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கக்கூடாது. ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக தேவை. எனவே ஜடேஜாவை அணியில் எடுக்க வேண்டும். அரையிறுதி போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டாரில் ஷமி ஏற்கனவே அசத்தலாக வீசியுள்ளார். அந்த மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஷமி அபாரமாக வீசினார். எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷமி ஆடுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.