உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது.

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக கருதப்படுகிறது. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மற்றும் நம்பர் 1 பவுலர் ஆகிய இருவருமே இந்திய வீரர்கள். இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுமே அபாரமாக உள்ளது. 

இவற்றிற்கெல்லாம் மேலாக கேப்டன் விராட் கோலிக்கு உதவுவதற்கு, கூடுதலாக 2 அபாரமான கேப்டன்சி திறன் கொண்டவர்களும் ஆட்டத்தின் மீதான அபார புரிதல் கொண்ட வீரர்களான தோனியும் ரோஹித்தும் உள்ளனர். இவர்களின் ஆலோசனையை பெற்றே இக்கட்டான நேரத்தில் கோலி செயல்படுகிறார். 

அதிலும் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியின் ஆலோசனைகள் அபாரம். கேப்டன் கோலிக்கு மட்டுமல்லாமல் பவுலர்களுக்கும் முக்கியமான ஆலோசனைகளை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார் தோனி. 

அந்த வகையில் இந்த உலக கோப்பையில் தோனியின் ஆலோசனைகள் தான் இந்திய அணி பெற்றிருக்கும் விலைமதிப்பற்ற வளம். உலக கோப்பையில் தோனியின் முக்கியத்துவம் குறித்து பேசிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தோனியின் விக்கெட் கீப்பிங் அனுபவம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கபோகிறது. விக்கெட் கீப்பரால் தான் பேட்ஸ்மேன் முனையிலிருந்து மொத்த மைதானத்தையும் பேட்ஸ்மேனின் வியூவில் பார்க்கமுடியும். 

அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையையும் அவரால் கணித்துவிடமுடியும். அதனால் அவர் வழங்கும் ஆலோசனைகள் மிக முக்கியம். கேப்டனுக்கும் பவுலர்களுக்கும் அவரது ஆலோசனை பயன்படும். தோனி மாதிரியான ஒரு அனுபவ வீரர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது இந்திய அணிக்கு கிடைத்த போனஸ் என்று டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.