கிரிக்கெட் வரலாற்றில் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் என பெரும்பாலான பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். 

சச்சின் டெண்டுல்கர் அவுட்டாகிவிட்டால், அதற்கு பின்னர் போட்டியை பார்க்காமல் ரசிகர்கள் எழுந்து சென்ற காலம் உண்டு. அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்திய அபாரமான அசாத்தியமான பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். 

சச்சின் டெண்டுல்கருக்கு இன்றளவும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று கிரிக்கெட் சார்ந்த பணிகளில் அதிகமான ஈடுபாட்டுடன் இல்லையென்றாலும், வர்ணனையாளர் என மிகக்குறுகிய வட்டத்தில் கிரிக்கெட்டுடன் டச்சில் இருக்கிறார். 

இந்நிலையில், தனக்கு பயனுள்ள அறிவுரை ஒன்றை கூறிய சென்னை ரசிகரை சமூக வலைதளத்தில் தேடிவருகிறார் சச்சின் டெண்டுல்கர். இதுதொடர்பாக சச்சின் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் ஒருமுறை டெஸ்ட் போட்டியில் ஆடியபோது தாஜ் கோரமன்டல் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது நான் காஃபி கேட்டேன். அந்த ஹோட்டலின் வெயிட்டர் ஒருவர் ரூமில் கொண்டுவந்து கொடுத்தார். 

அப்போது, நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால், நான் உங்களிடம் கிரிக்கெட் குறித்து கொஞ்சம் பேசலாமா என்று என்னிடம் கேட்டார். அதனால் என்ன, பேசுங்கள் என்று சொன்னேன். நீங்கள் கைக்காப்பு(கைக்கவசம் - arm guard) அணிந்து ஆடும்போது, நீங்கள் பேட்டை சுழற்றும் முறையே மாறிவிடுகிறது. உங்களது இயல்பான ஆட்டமாக அது தெரியவில்லை என்று கூறினார். இந்த விஷயத்தை இதற்கு முன்னால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து உலகில் யாருமே என்னிடம் சொன்னதில்லை. ஆனால் அவர், என்னுடைய மிகத்தீவிரமான ரசிகராம். என்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் 7-8 முறை ரீவைண்ட் செய்து பார்ப்பாராம்.

மிகவும் துல்லியமாக எனது பேட்டிங்கை கவனித்து, என்னிடம் வந்து கைக்காப்பு குறித்து கூறினார். உண்மையாகவே ஒரு விஷயம் சொல்கிறேன்.. அவர் சொன்னதற்கு பிறகு, என்னுடைய கைக்காப்பை(arm guard) மாற்றி வடிமைத்தேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் சச்சின்.

 

அதற்கடுத்து பதிவிட்ட டுவீட்டில், இந்த விஷயத்தை தமிழில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், அந்த வெயிட்டரை தேடுவதாகவும், அவரை கண்டுபிடிக்க அனைவரும் உதவுமாறும் ஒரு டுவீட் செய்துள்ளார். 

இந்த விஷயத்தை சச்சின் சொல்லவில்லையென்றால், யாருக்கும் தெரியப்போவதில்லை. அவர் சாதாரண ஊழியர் தானே, அவர் என்ன நமக்கு ஆலோசனை சொல்வது என்ற ஆணவம் இல்லாமல், அவரது ஆலோசனையை ஏற்று, அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து, தவறை திருத்திக்கொண்டதோடு, அந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லி, அந்த முகம் தெரியாத ஹோட்டல் ஊழியரை கௌரவப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார் சச்சின்.