சச்சின் டெண்டுல்கர் 1992 உலக கோப்பையிலிருந்து 2011 உலக கோப்பை வரை மொத்தம் 6 உலக கோப்பைகளில் ஆடினார். 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய 5 உலக கோப்பைகளில் ஆடியும், தான் ஆடிய காலத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க முடியாத வேதனையில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு 2011 உலக கோப்பை, அந்த வேதனையை தீர்த்து வைத்தது. 

தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை வென்றது. கிரிக்கெட் உலகின் ஆல்டைம் ஜாம்பவான், ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் ஃபைனல் நடந்தது. அந்த ஃபைனலில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது. 

அந்த உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பிக்கும் விதமாக, இந்திய வீரர்கள் அவரை கௌரவப்படுத்தினர். இந்திய அணி உலக கோப்பையை வென்றதும், இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் சுமந்துகொண்டு மும்பை வான்கடே மைதானத்தை வலம்வந்தனர். 

அந்த தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் காலத்துக்கும் மறக்கமுடியாத சம்பவம். Laureus Sporting Moment 2000-2020ல் அந்த தருணமும் நாமினேட் ஆகியிருக்கிறது. எனவே அதற்கு வாக்களிக்குமாறு யுவராஜ் சிங், விராட் கோலி ஆகியோர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். 

Also Read - ஆர்சிபி அணியின் அதிரடி முடிவு.. கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்..?

யுவராஜ் சிங்கின் டுவீட்டிற்கு பதிலளித்திருந்த சச்சின் டெண்டுல்கர், யுவி,  இந்திய அணி மட்டுமல்லாமல் உலகம் முழுதும் வாழும் இந்தியர்களுக்கான தருணம் அது. 2011 உலக கோப்பையை வென்றது, ஏதோ நேற்று நடந்த சம்பவம் போல இருக்கிறது. இப்போது அந்த தருணத்தை நினைத்து பார்த்தாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.