இந்திய அணி 1000வது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடவுள்ள நிலையில், தான் ஆடியதில் 5 சிறந்த ஒருநாள் போட்டிகளை தேர்வு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணி இதுவரை 999 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டி 1000வது சர்வதேச ஒருநாள் போட்டி. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தவுள்ளார்.
இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 999 ஒருநாள் போட்டிகளில் 463 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் ஆடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் அதிக ரன்களை (18426 ரன்கள்) குவித்த வீரர் என்ற சாதனைக்குரிய சச்சின் டெண்டுல்கர், தனது கெரியரில் தான் ஆடியதில் மிகச்சிறந்த 5 ஒருநாள் போட்டிகள் எவை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், 2011 உலக கோப்பை ஃபைனல், 1998ல் ஷார்ஜாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி, 2003 உலக கோப்பையில் செஞ்சூரியனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, VB தொடரில் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டிகள் ஆகிய 5 ஒருநாள் போட்டிகளும் எனது கெரியரின் சிறந்த 5 போட்டிகள் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
1. 2011 உலக கோப்பை ஃபைனல்:
2011 உலக கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று, 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலக கோப்பையை தூக்கியது. சச்சின் டெண்டுல்கரின் கெரியரில் வென்ற ஒரே உலக கோப்பை தொடர் இதுதான் என்பதால், அந்த இறுதிப்போட்டியை தனது கெரியரின் சிறந்த போட்டிகளில் முதல் போட்டியாக தேர்வு செய்துள்ளார் சச்சின்.
2. இந்தியா vs ஆஸ்திரேலியா - 1998ல் நடந்த ஷார்ஜாவில் நடந்த போட்டி:
1998ல் ஷார்ஜாவில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 272 ரன்கள் அடித்தது. 273 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டியபோது, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த சச்சின் டெண்டுல்கர் 134 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.
3. இந்தியா vs பாகிஸ்தான் - 2003 ஒருநாள் உலக கோப்பை போட்டி:
2003ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 273 ரன்களை அடித்தது. 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது, பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகிய மூவரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கிய சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். 2 ரன்னில் அவர் சதத்தை தவறவிட்டிருந்தாலும், அவரது அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸ் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ்.
4. இந்தியா vs ஆஸ்திரேலியா - VB தொடர் ஃபைனல் (சிட்னி)
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அந்த தொடரின் ஃபைனலுக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முன்னேறிய நிலையில், 2 ஃபைனல் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த தொடரை வென்றது. சிட்னியில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 239 ரன்கள் அடிக்க, சச்சின் டெண்டுல்கரின் சத (117) உதவியுடன் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
5. இந்தியா vs ஆஸ்திரேலியா - VB தொடர் ஃபைனல் (பிரிஸ்பேன்)
அதே தொடரின் பிரிஸ்பேனில் நடந்த ஃபைனலிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 91 ரன்கள் அடித்தார்.
இந்த 5 ஒருநாள் போட்டிகளும்தான் தனது கெரியரில், தான் ஆடிய சிறந்த 5 போட்டிகள் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
