உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மான்செஸ்டரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11ம் தேதி பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்திய அணி 6வது பவுலருடன் களமிறங்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. 

பும்ரா, ஷமி/புவனேஷ்வர் குமார், சாஹல்/ஜடேஜா, குல்தீப், ஹர்திக் பாண்டியா என 5 பவுலர்களுடன் தான் இதுவரை இந்திய அணி களமிறங்கியுள்ளது. உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தான் முதல் வாய்ப்பே வழங்கப்பட்டது. 

கேதர் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக்கை 7ம் வரிசையில் இறக்கும் எண்ணத்தில் அணி நிர்வாகம் உள்ளது. தினேஷ் கார்த்திக் தனது ரோல் குறித்து பேசும்போது இந்த தகவலை உறுதி செய்திருந்தார். 

தினேஷ் கார்த்திக் 7ம் வரிசையில் தான் இறங்கப்போகிறார் என்றால் அவரை அணியில் எடுக்க தேவையில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்க்கலாம். ஜடேஜா நல்ல தேர்வாக இருப்பார். ஜடேஜாவை சேர்ப்பதன் மூலம் 6வது பவுலிங் ஆப்சன் கிடைக்கும் என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவரை எடுக்க வேண்டும் என சச்சின் கருத்து தெரிவித்திருந்தார். 

சச்சின் டெண்டுல்கரின் கருத்து சரியானதுதான். ஏனெனில் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி என டாப் ஆர்டர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் 7வது பேட்ஸ்மேன் வரை கண்டிப்பாக பேட்டிங் ஆடவேண்டிய சூழல் ஏற்படும் என்று டிஃபென்சிவாக யோசிக்காமல் நமது பேட்டிங் ஆர்டர் நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் ஆதிக்க மனநிலையுடனும் இருக்க வேண்டியது அவசியம். அப்படி பார்க்கையில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஜடேஜாவை சேர்க்கலாம். ஜடேஜாவும் டெத் ஓவர்களில் பெரிய ஷாட் ஆடக்கூடியவர் மட்டுமல்லாது நல்ல பவுலரும் கூட. இவற்றையெல்லாம் விட அபாரமான ஃபீல்டர். தனது ஃபீல்டிங்கின் மூலமே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால் அவரை அணியில் சேர்க்கலாம். 

ஒருவேளை 5 பவுலர்களுடன் களமிறங்குவதாக இருந்தாலும், குல்தீப் - சாஹல் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்படுவதற்கே வாய்ப்புள்ளது. ஆனாலும் கரெக்ட்டாக 5 பவுலர்களுடன் ஆடுவதைவிட, கூடுதல் பவுலிங் ஆப்சனுடன் ஆடுவது நல்லது. இரண்டாவது பேட்டிங் ஆடினால், சேஸிங்கின்போது  பேட்டிங்கில் டெப்த் தேவைதான். தினேஷ் கார்த்திக் ஃபின்ஷிங் ரோல் பிளே பண்ணுவார் என்பதால் தான் அவர் அணியில் எடுக்கப்பட்டார். எனினும் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கா ஜடேஜா அல்லது இருவருமே அணியில் சேர்க்கப்பட்டு ஒரு ஸ்பின்னர் நீக்கப்படுவாரா என்பதை பார்ப்போம்.