கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில், முதல் நாளான நேற்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மழையால், முதல் நாள் பெரும்பாலான ஆட்டம் தடைபட்டது. 

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில், இந்த போட்டி நேற்று தொடங்குவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கரும் பிரயன் லாராவும் ஆன்லைனில் விவாதித்தனர். 

அப்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்), மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்ரவுண்டர். கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்தாலும், ஹோல்டரும் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துபவர்.

பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கும் சிறப்பாக ஆடுவார். அணிக்கு தேவையான நேரத்தில், முக்கியமான 50-55 ரன்களை அடிப்பவர் ஹோல்டர். தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் ஹோல்டர், குறைத்து மதிப்பிடப்பட்டார். வெஸ்ட் இண்டீஸின் மிரட்டலான வீரர் அவர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 1898 ரன்களை அடித்துள்ளார்; 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில், 114 போட்டிகளில் ஆடி, 1810 ரன்கள் அடித்திருப்பதுடன் 134 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.