உலக கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். அதிலும் இந்த முறை முதன்முறையாக உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் பாகிஸ்தானுக்கு எதிரான கெத்தான ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

எனவே உலக கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது பாகிஸ்தான் அணி. அதனால் அந்த அணி வெற்றிக்கு போராடும். ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நெருங்கிவிட்ட நிலையில், அந்த போட்டியில் எப்படி ஆட வேண்டும் என இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ரோஹித்தும் விராட் கோலியும் அனுபவ வீரர்கள். எனவே அவர்கள் இருவரையும் விரைவில் வீழ்த்த முனைவார்கள் பாகிஸ்தான் பவுலர்கள். வஹாப் ரியாஸும் அமீரும் கோலி மற்றும் ரோஹித்தின் விக்கெட்டை விரைவில் எடுக்க நினைப்பார்கள். இது ரோஹித்துக்கும் கோலிக்கும் தெரியும். எனவே இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில் உறுதியாக இருப்பார்கள். ரோஹித் மற்றும் கோலியை சுற்றித்தான் மற்ற வீரர்கள் ஆட வேண்டும். 

முகமது அமீர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக வீசினார். அவரது பவுலிங்கில் அடித்து ஆடாமல் தடுப்பாட்டம் ஆடுவதில் தவறில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால், அவர்களின் இயல்பான ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடலாம். பாகிஸ்தானுக்கு எதிராக வித்தியாசமாக எதையும் செய்ய தேவையில்லை. களத்தில் கெத்தாக இறங்கி ஆக்ரோஷமாக ஆட வேண்டும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வீரர்களின் உடல்மொழி ரொம்ப முக்கியம் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.