ரோஹித் சர்மா கேப்டன்சி நன்றாக செய்தால் மட்டும் போதாது; பேட்டிங்கும் சிறப்பாக ஆடவேண்டும் என்று முன்னாள் தேர்வாளர் சபா கரீம் எச்சரித்துள்ளார். 

முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி:

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் கேப்டன்சியில் அபாரம்; பேட்டிங்கில் சொதப்பல்:

அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 175 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் அடித்த நிலையில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா கேப்டன்சி சிறப்பாக செய்கிறார். வீரர்களை கையாளும் விதம், களவியூகம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார். ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கூட ரோஹித் சர்மா அதிரடியாகத்தான் தொடங்கினார். நல்ல டச்சில் பெரிய ஷாட்டுகளை அருமையாக ஆடினார். 27 பந்திலேயே 29 ரன்களை அடித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட 28வது பந்தில் புல் ஷாட் ஆடி, டீப் ஃபைன் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது பலமான புல் ஷாட்டை அவரது பலவீனமாக்கி, அவரை பவுன்ஸர் வீசி புல் ஷாட் ஆடவைத்து வீழ்த்துகின்றனர் எதிரணி பவுலர்கள். இது தொடர்ந்து நடந்துவரும் நிலையில், களத்தில் நன்றாக செட்டில் ஆனபின்னர் அந்த ஷாட்டை ஆடுமாறும், ஆரம்பத்திலேயே ஆடவேண்டாம் என்றும் கவாஸ்கர் ரோஹித்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக ஆடவேண்டும் என்று முன்னாள் தேர்வாளர் சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.

சபா கரீம் எச்சரிக்கை:

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சபா கரீம், ரோஹித் சர்மா கேப்டன்சியில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அதேவேளையில் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல ஸ்கோர் செய்து அணிக்கு பங்களிப்பு செய்வது முக்கியம். எனவே அடுத்த டெஸ்ட் போட்டி ரோஹித்துக்கு மிகவும் சவாலான டெஸ்ட் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.