T20I BATTING RANKINGS: டி20 தரவரிசை பட்டியலில் 13 இடங்கள் முன்னேறி 7ஆவது இடம் பிடித்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி வெளியிட்ட டி20 ஆண்களுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் 13 இடங்கள் முன்னேறி 7ஆவது இடம் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்று சமனில் உள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொடரின் மூலமாக தனது பணியை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் தான் ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் 20ஆவது இடத்திலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 13 இடங்கள் முன்னேறி தற்போது 7ஆவது இடம் பிடித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் சரிந்து 11ஆவது இடம் பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்ட ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களில் வேறு எந்த வீரரும் இடம் பெறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவர் மட்டுமே 7 மற்றும் 11ஆவது இடங்களை பிடித்துள்ளனர். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் போட்டியில் 7 ரன்னில் வெளியேறினார்.