ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மீண்டும் அசத்தும் முனைப்புடன் ஆடிவருகிறது.

இந்த சீசனில் ரெய்னா, மொயின் அலி ஆகிய வீரர்களுடன், கடந்த சீசனைவிட வலுவான பேட்டிங் ஆர்டருடன் ஆடுகிறது சிஎஸ்கே. ஆனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் ஒரே ஆறுதலாக இருந்த இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் தடுமாறிவருகிறார். 

கடந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் அபாரமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், 6 போட்டிகளில் 204 ரன்களை குவித்தார். ஆனால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. முதலிரண்டு போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

சீனியர் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அணியில் இருந்தாலும் கூட, ருதுராஜ் மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ருதுராஜையே ஆடவைத்தது சிஎஸ்கே அணி.

டாஸ் போட்ட பின்னர் ருதுராஜ் குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நல்ல பந்தில் அவுட்டாவது பிரச்னையில்லை(முதல் போட்டியில் ருதுராஜ் மொக்கையாக அவுட்டாகவில்லை. நல்ல பந்தில் தான் அவுட்டானார்). கடந்த ஆண்டே ஏற்ற இறக்கங்களை அவர் கற்றிருப்பார். ஒரு கேப்டனாக, பயிற்சியாளராக ஆதரவுதான் அளிக்க முடியும். களத்தில் அவர் தான் ஆடவேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் மீது சிஎஸ்கே அணி நிர்வாகமும் கேப்டன் தோனியும் வைத்திருந்த நம்பிக்கையை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சொதப்பலாக ஆடி சிதைத்தார் ருதுராஜ். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 13 பந்தில் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்து முஸ்தாஃபிசுரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 188 ரன்கள் அடித்த நிலையில், 189 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டிவருகிறது.