வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணி தேர்வு குறித்து வரும் 21ம் தேதி தேர்வுக்குழு விவாதிக்கவுள்ளது. அந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோஹித் சர்மா இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக ஆடிவருகிறார். இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் தான் ரோஹித் சர்மா ஆடவில்லை. அதுதவிர மற்ற அனைத்து தொடர்களிலும் ஆடியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்து சுற்றுப்பயணம், ஐபிஎல், உலக கோப்பை, தென்னாப்பிரிக்க தொடர், வங்கதேச தொடர் என தொடர்ச்சியாக அனைத்திலும் ஆடிவருகிறார். அதிலும் தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துவிட்டதால், அவருக்கு ஓய்வே இல்லை. விராட் கோலியாவது அவ்வப்போது டி20 தொடர்களில் ஓய்வெடுத்து விடுகிறார். ஆனால் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 60க்கும் அதிகமான போட்டிகளில் ஆடியுள்ளார். 

எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கு 40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து நீண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. எனவே அந்த தொடருக்கு ரோஹித் சர்மா ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படவிருக்கிறது. 

தவான் சொதப்பிவருவதால், அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் ஒருநாள் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்படவிருப்பதால், அவருக்கு பதிலாக மயன்க் இறங்கவுள்ளார். ஆக மொத்தத்தில் மயன்க் அகர்வால், ஒருநாள் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறங்குவது உறுதியாகிவிட்டது.