உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை இந்த உலக கோப்பையில் வீழ்த்தப்படாத ஒரே அணி இந்திய அணி தான். 

இந்திய அணியின் பேட்டிங்கைவிட பவுலிங் தான் அபாரமாக உள்ளது. பும்ரா - புவனேஷ்வர் குமார் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி எதிரணிகளை தெறிக்கவிட்டது. புவனேஷ்வர் குமாரின் காயத்திற்கு பிறகு அவரது இடத்திற்கு வந்த ஷமி, அவரை விட அபாரமாக வீசிக்கொண்டிருக்கிறார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் சிறப்பாக உள்ள நிலையில், மிடில் ஆர்டர் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய அணி டாப் ஆர்டரை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஏமாற்றாமல் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அபாரமாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சரியாக ஆடவில்லை.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரோஹித்தின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியது. கீமார் ரோச் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்து ரோஹித்தின் பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் ரிவியூ எடுத்தது. 

ரீப்ளேவில் எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் க்ளோசாக இருந்தது. பேட்டும் கால்காப்பும் ஒரே நேர்கோட்டில் இருந்ததால் பந்து பேட்டில் முதலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதை கண்டறிய மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தேர்டு அம்பயர் மைக்கேல் காஃப் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் தான் பட்டது; அம்பயர் தவறாக அவுட் கொடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டனர். 

ரோஹித் சர்மாவும் அதிருப்தியுடனேயே களத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இன்று தான் அவுட் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மிகவும் க்ளோசப்பில், நல்ல கோணத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, தலையில் அடித்துக்கொள்வது போல் ஒரு எமோஜியை போட்டுள்ளார் ரோஹித். ரோஹித்துக்கு ஆதரவாக ரசிகர்களும் டுவீட் செய்துவருகின்றனர்.