இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளேயில் இருவரும் இணைந்து 68 ரன்களை அடித்தனர். இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அந்த ஜோடியை ஷிவம் துபே பிரித்தார். 

பும்ரா, ஷமி, தாகூர் ஆகியோரின் பவுலிங்கை அடித்து ஆடிய கப்டிலை, துபே தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார். துபே வீசிய பந்தை கப்டில் தூக்கியடிக்க, அதை பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்த ரோஹித் சர்மா, அபாரமாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த ரோஹித், பேலன்ஸ் மிஸ்ஸானதால் பவுண்டரி லைனிற்குள் செல்ல நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் பந்தை தூக்கிப்போட்டார். ஆனால் பவுண்டரி லைனிற்குள் செல்லாமல் பேலன்ஸ் செய்த ரோஹித், தூக்கிப்போட்ட பந்தை மீண்டும் பிடித்தார். அந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது. 

ரோஹித் சர்மா பிடித்த இந்த கேட்ச் தான் முதல் விக்கெட்டே. அதன்பின்னர் அதிரடியாக ஆடிய முன்ரோ அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். வில்லியம்சன் 26 பந்தில் 51 ரன்களும், டெய்லர் 27 பந்தில்54 ரன்களும் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை அடித்தது. 

204 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தாலும் ராகுலும் கோலியும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். அபாரமாக ஆடிய ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் 10 ஓவரிலேயே இந்திய அணி 116 ரன்களை குவித்துவிட்டதால், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் இந்திய அணிக்கு வெற்றி எளிதுதான். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடிவருகிறார்.