விராட் கோலியின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டாலும், அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கிறது. விராட் கோலி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். 

விராட் கோலி ஆடாத தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பலராலும் புகழப்பட்டுவருகிறது. அதேபோலவே அவரும் கேப்டனாக செயல்பட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார். நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை என ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆடிய அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. 

இப்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில், கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மா, கேப்டன்சி எல்லாம் நமது கைகளில் இல்லை. ஒரு போட்டியோ அல்லது 100 போட்டியோ.. எத்தனை போட்டிகள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவதே பெரிய கௌரவம்தான். இந்திய அணிக்கு நான் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் மிகச்சிறப்பானது. எனவே எவ்வளவு காலம் கேப்டனாக செயல்பட்டோம் என்பது முக்கியமல்ல. என்னையவே ஏன் நிரந்தர கேப்டனாக நியமிக்கக்கூடாது என்று நான் யோசித்ததும் இல்லை. எப்போதெல்லாம் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்கிறதோ அதை நான் ரசித்து மகிழ்ந்து செய்கிறேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.