ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 

இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் காயம் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவதால், உலக கோப்பையில் ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக இறக்கப்படுவதற்கான வாய்ப்புதான் உள்ளது. மற்றபடி பேட்டிங் ஆர்டரை பொறுத்தமட்டில் எந்த மாற்றமும் இருக்காது. கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இறங்குவார்கள்.

ஸ்பின் பவுலர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப், சாஹல், ஜடேஜா ஆகிய அனைவருமோ அல்லது இவர்களில் மூவரோ எடுக்கப்படலாம். ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில்தான் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பும்ரா அணியில் இருப்பது உறுதி. அவருடன் புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எடுக்கப்படுவார்களா அல்லது நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோர் எடுக்கப்படுவார்களா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. புவனேஷ்வர் குமார், ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர் இவர்கள் நால்வரில் மூவர் எடுக்கப்படுவர். 

சஞ்சு சாம்சன், தவான், மனீஷ் பாண்டே, க்ருணல் பாண்டியா ஆகியோர் அணியில் இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் பேட்டிங் ஆர்டரும் ஸ்பின் பவுலிங் யூனிட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போலவே தெரிகிறது. ஆனால் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா அவ்வாறு கருதவில்லை. இந்திய அணியில் இன்னும் நிறைய இடங்கள் காலியாக இருப்பதாக கருதுகிறார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணி குறித்து ஹிந்துஸ்டான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அணி குறித்து பேசிய ரோஹித் சர்மா, உலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறோம். நிறைய வீரர்கள் உலக கோப்பைக்காக தயாராகிவருகின்றனர். நிறைய இடங்களுக்கான தேவை அணியில் இருப்பதையே இது காட்டுகிறது. மிகத்திறமையான மற்றும் இதுவரை சிறப்பாக ஆடியிருக்கும் வீரர்கள் 20 பேர் வரை வைத்திருக்கிறோம். சிறந்த வீரர்களை பெற்றிருக்கிறோம். எனவே ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்ல என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் இடம்பெற நிறைய வீரர்கள் போட்டு போடுவது, நிறைய இடங்களுக்கான தேவையிருப்பதை காட்டுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையாகவே நிறைய இடங்களுக்கான தேவையில்லை. ஒருசில இடங்களுக்காக நிறைய வீரர்கள் போட்டு போடுகின்றனர்.