இந்திய அணியில் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி மீண்டும் இணைந்து ஆடுவது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை(6ம் தேதி) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியில் மீண்டும் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி இணைந்து ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டு முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களாக ஆடி, மிடில் ஓவர்களில் தேவைப்பட்ட போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர்கள் குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி.
2019 ஒருநாள் உலக கோப்பை வரை இந்திய அணியில் இணைந்து ஆடிய அவர்கள், அந்த உலக கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காததன் விளைவாக, அதன்பின்னர் இந்திய அணியில் இணைந்து ஆடவில்லை. அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டு பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்பட்டதால் அவர்கள் இருவரில் ஒருவர் தான் அணியில் இடம்பெற முடிந்தது. அந்த ஒருவர் பெரும்பாலும் சாஹலாகவே இருந்தார்.
இந்நிலையில், ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆனபின்னர், கேப்டன்சி ரோஹித்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் - சாஹல் ஆகிய இருவருமே அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஆடும் லெவனிலும் அவர்கள் இருவரும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம், குல்தீப் - சாஹல் இணைந்து ஆடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய ரோஹித் சர்மா, சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இருவருமே கடந்த காலங்களில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அணி காம்பினேஷனுக்காக அவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து இந்திய அணியில் எடுக்க முடியாமல் போயிற்று. ஆனால் நான் மீண்டும் அவர்கள் இருவரையும் சேர்ந்து ஆடவைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறேன். குல்தீப் யாதவ் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடுகிறார். எனவே அவர் மீது அழுத்தம் போடாமல் அவரை சாமர்த்தியமாக கையாள வேண்டியது அவசியம் என்றார் ரோஹித்.
