இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 

மயன்க் அகர்வால் வெறும் 10 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழக்க, இதையடுத்து களத்திற்கு வந்த புஜாரா ரன்னே எடுக்காமல் ரபாடாவின் பந்தில் அவுட்டானார். முக்கியமான முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டதால், கோலியும் ரோஹித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 

ரோஹித் - கோலி அனுபவ ஜோடி என்பதால், அவர்கள் மீது பெரும் நம்பிக்கை இருந்த நிலையில், கோலி 12 ரன்களில் நோர்ட்ஜேவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதையடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது. இக்கட்டான சூழலில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார் ரஹானே. 

கண்டிப்பாக பெரிய பாட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோஹித்தும் ரஹானேவும் அந்த பணியை செவ்வனே செய்தனர். முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டதால், அவசரப்படாமல் மிகவும் நிதானமாக ஆடிய இருவரும், உணவு இடைவேளைக்கு பின்னர் அடித்து ஆட தொடங்கினர். 

ரஹானே பவுண்டரிகளாக விளாச, ரோஹித்தும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். இருவருமே அடித்து ஆட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ரஹானேவும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் தனது வேலையை காட்ட ஆரம்பித்த ரோஹித் சர்மா, பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக அடித்து ஆட, அணியின் ஸ்கோரும் அவரது ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்தார். தனது 6வது டெஸ்ட் சதத்தை விளாசிய ரோஹித் சர்மா, தொடர்ந்து சிறப்பாக ஆட, மறுமுனையில் ரஹானேவும் அபாரமாக ஆடிவருகிறார். இருவரும் இணைந்து 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.