விராட் கோலியின் ஃபார்ம் குறித்த ஊடகங்களின் கேள்விக்கு இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் ரோஹித் சர்மா, தடாலடியாக பதிலளித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. நாளை முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது விராட் கோலி ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவர் அரைசதங்கள் நிறைய அடித்தாலும், 2 ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார். அதற்காக அவர் பேட்டிங் ஃபார்மில் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால் விராட் கோலி சதங்களை விளாசியே பழக்கப்பட்ட வீரர் என்பதால், அவரிடமிருந்து ரசிகர்கள் சதத்தை எதிர்பார்க்கின்றனர். அவரோ 2 ஆண்டுகளாக சதமடிக்கவில்லை.
விராட் கோலியிடமிருந்து பெரிய ஸ்கோரை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களும் ஊடகங்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 26 ரன்கள் அடித்த விராட் கோலி, அடுத்த 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து கோலியின் ஃபார்ம் குறித்த விவாதம் தான் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அந்தவகையில், ரோஹித் சர்மா செய்தியாளர்கள் சந்தித்தபோது, கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, மீடியா தான் இதை கிளப்பி விடுவதே.. நீங்கள்(மீடியா) அமைதியாக இருந்தால், அதுவே கோலிக்கு போதும். அவர் எப்படி ஆடவேண்டும் என்பதை அவரே பார்த்துக்கொள்வார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் விராட் கோலிக்கு, அழுத்தங்களை எப்படி கையாள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும் என்றார் ரோஹித்.
