உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே சிறப்பாகத்தான் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி அந்த அணிக்கு மூன்றாவது போட்டி. 

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீஸ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வீரர்களும் ஆடுகின்றனர். ஓவல் ஆடுகளம் ஹை ஸ்கோரிங் ஆடுகளம். அதில் இந்த 4 வீரர்களும் ஒரே போட்டியில் ஆடுவதால் இந்த போட்டி கண்டிப்பாக ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும். 

இந்நிலையில், ஸ்மித் தான் உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஸ்மித் ஆகிய இருவருமே உலகளவில் ஒரே தராசில் வைத்து பார்க்கக்கூடிய வீரர்கள். நம்பர்களின் அடிப்படையில் என்றால் விராட் கோலி டாமினேட் செய்வார். இருவருமே மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள். 

இந்தியாவுக்கு எதிரான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், என்னை பொறுத்தவரை ஸ்மித் தான் மூன்றுவிதமான போட்டிகளிலும் உலகளவில் சிறந்த வீரர் என்று ஃபின்ச் தெரிவித்துள்ளார். 

ஃபின்ச்சின் கருத்து குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித்திடம், மூன்றுவிதமான போட்டிகளிலும் உலகளவில் ஸ்மித் தான் சிறந்த வீரர் என்று ஃபின்ச் கூறுகிறாரே..? உங்கள் அணியிலேயே ஒரு தலைசிறந்த வீரர் இருக்கிறார்.. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஃபின்ச் சொல்வது சரிதானா? அல்லது உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, அவர்கள் இருவரும் ஆடும் காலம் முழுவதும் இந்த விவாதம் நடந்துகொண்டே தான் இருக்கும். யார் யாரை விட சிறந்தவர் என்று நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால் நான் அப்படியெல்லாம் செய்யமுடியாது என்று நெற்றியடியாக பதிலளித்துவிட்டார்.