இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடிய விதத்தை பார்ந்து அசந்துபோன கேப்டன் ரோஹித் சர்மா, அவரை புகழ்ந்து பேசியுள்ளார். 

இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஏகப்பட்ட வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டாப் ஆர்டரில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் அனைவருமே நன்றாக ஆடுவதால் இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பிரதான மிடில் ஆர்டர் வீரர்கள் என்றாலும் மற்றவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். எனவே இந்திய அணி நிர்வாகத்திற்கு அணி தேர்வு என்பது மகிழ்ச்சியான தலைவலியாக மாறியுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்தது. முதல் டி20 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சனுக்கு 2வது டி20 போட்டியில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, சஞ்சு சாம்சனின் பேட்டிங் திறமையை வெகுவாக புகழ்ந்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா, அவரது திறமை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஒரே ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றி காட்டினார் சஞ்சு சாம்சன். 

184 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே பவர்ப்ளேயில் ஆட்டமிழந்துவிட்டதால், விரைவில் களத்திற்கு வர வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன், அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்டார். ஷ்ரேயாஸ் ஐயர் ஒருமுனையில் அதிரடியாக விளையாடியதால், களத்திற்கு வந்ததும் செட்டில் ஆக கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சன், செட்டில் ஆனபின்னர் அதிரடியை ஆரம்பித்தார். லஹிரு குமாரா வீசிய 13வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் சஞ்சு சாம்சன். 25 பந்தில் 39 ரன்கள் அடித்த சாம்சன், அதே ஓவரில் அவுட்டும் ஆனார். ஆனால் நான்கே பந்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டுத்தான் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன்.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்தில் 74 ரன்களும், ஜடேஜா 18 பந்தில் 45 ரன்களும் அடிக்க 18வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

ஏற்கனவே சஞ்சு சாம்சன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்ததுடன், அவரது திறமையை புகழ்ந்து பேசியிருந்த ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிரான அவரது பேட்டிங்கை பார்த்தபிறகு மீண்டும் புகழ்ந்து பேசினார். 

2வது டி20 போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, திறமையான பேட்டிங் யூனிட்டை பெற்றிருக்கிறோம். நாங்கள் அனைவருக்குமே வாய்ப்பளிக்கிறோம். அதை பயன்படுத்திக்கொள்வது அவர்களது கையில் உள்ளது. சஞ்சு சாம்சன், அவரால் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதை காட்டியுள்ளார். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதுதான் முக்கியம். அணியில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள் தான். இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அவரவர்க்கான நேரம் வரும்போது கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என கூறினார் ரோஹித் சர்மா.