ரோஹித் சர்மா ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய 4 சீசன்களிலும் டைட்டிலை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்தது. 

தோனியை விட ஒரு முறை அதிகமாக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மாவின் தெளிவான சிந்தனை, ஆட்டத்தின் போக்கை சரியான கணிக்கும் திறன், வீரர்களை கையாளும் விதம், களவியூகம், ஃபீல்டிங் செட்டப் என அனைத்திலுமே சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா. 

அதுமட்டுமல்லமால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வீரர்கள் தேர்வும் அந்த அணியின் வெற்றிக்கு காரணம். சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்கள் எல்லாம் அந்த அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார்கள். ஆனால் அவர்களால் முடியாததையெல்லாம் ஒரு கேப்டனாக, ஒன்றுக்கு 4 முறை சாதித்துக்காட்டினார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் வீரர்கள் தேர்வு அருமையாக உள்ளது. ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும்போதே அவர்கள் ஜெயித்துவிடுகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவிடம், ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஓய்வுபெற்ற வீரர்களில் இருவரை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுப்பது என்றால், யாரை எடுப்பீர்கள் என்று கேள்வியெழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷான் போலாக் ஆகிய இருவரின் பெயரையும் தெரிவித்தார். 

சச்சின் டெண்டுல்கர் 2008லிருந்து 2013 வரை 6 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். 78 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2334 ரன்களை குவித்துள்ளார். ஷான் போலாக் ஐபிஎல்லின் அறிமுக சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். அந்த ஒரு சீசன் மட்டுமே அவர் ஆடினார். அதன்பின்னர் ஐபிஎல்லில் ஆடவில்லை.