டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். 

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கியதால், அவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, பந்துகளை பறக்கவிட்டார். 84 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித், தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தினார். அவர் 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் உதவியுடன் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார். 

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கி வருகிறார். தற்போது நிலவரப்படி இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 115, மயங்க அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.