இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனை வெகுவாக புகழ்ந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கான வாய்ப்பு குறித்தும் பேசியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக ஆடி, மிகப்பெரிய ஸ்கோர் செய்யக்கூடிய திறமையான பேட்ஸ்மேன் சாம்சன். ஆனால் அவரது பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

மேலும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப் ஆர்டரில் ரோஹித், ராகுல், இஷான் கிஷன் ஆகியோருடன் ருதுராஜ் கெய்க்வாட்டும் மல்லுக்கு நிற்கிறார். மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் போட்டி இன்னும் அதிகமாகும்.

எனவே சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதே கடினமாக உள்ளது. அவர் ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளில் பெரிதாக சோபிக்காததால் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறினார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் ஆடாததால் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க ஏதுவாக, சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம். இந்த தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடர்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன் மிகத்திறமையான வீரர். ஐபிஎல்லில் ஒவ்வொரு முறையும் அனைவருமே வியக்கும் வண்ணம் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடுவார். சாம்சன் அபாரமான திறமைசாலி. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் திறமையை களத்தில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். 

சஞ்சு சாம்சனின் திறமை அணி நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். அவரது திறமையை கண்கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால் அவரது திறமையை அவர் எப்படி களத்தில் பயன்படுத்துகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையும் கொடுப்போம். டி20 உலக கோப்பைக்கான ரேஸில் அவரும் இருக்கிறார். அவரது பேக்ஃபூட் ஷாட் அபாரமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஆடும்போது பெரிய ஷாட்டுகளை ஆடும் திறமை வேண்டும். அது சாம்சனிடம் இருக்கிறது. சாம்சன் அவரது திறமையை நல்லவிதமாக பயன்படுத்துவார் என நம்புகிறேன் என்றார் ரோஹித்.