ரோஹித் சர்மா சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக வெள்ளைப்பந்து(ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்குகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியிலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். 

2007ல் இந்திய அணியில் அறிமுகமான ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் சரியாக சோபிக்கவில்லை. அதனால் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அணியில் ரோஹித் சர்மாவிற்கு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தது. தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரோஹித் சர்மா, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். 

அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 2014ல் மறுபடியும் ஒரு இரட்டை சதம்(264), 2017ல் மீண்டும் இலங்கைக்கு எதிராக மற்றொரு இரட்டை சதம் என மொத்தம் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்களுடன் 9116 ரன்களை குவித்துள்ளார். 

படிப்படியாக வளர்ந்து இப்போது சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மா, எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் கெத்தாக நின்று அடித்து ஆடி சிக்ஸர்களை பறக்கவிட்டு, பவுலர்களை அச்சுறுத்துபவர். ரோஹித் களத்தில் நிலைத்துவிட்டால், எப்பேர்ப்பட்ட பவுலரும் அவருக்கு பந்துவீச பயப்படுவார்கள். சிரத்தையே இல்லாமல் சிக்ஸர் அடிக்கக்கூடியவர். அப்பேர்ப்பட்ட ரோஹித்தையே அச்சுறுத்திய 4 பவுலர்கள் யார் என அவரே தெரிவித்துள்ளார். ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், முகமது ஷமியுடன் சமூக வலைதளத்தில் லைவ் சேட் செய்தார் ரோஹித். அப்போது, அவருக்கு பிடித்த 4 பவுலர்கள் யார் என ஷமி கேட்டார். 

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, முதல் நபர் பிரெட் லீ. ஆஸ்திரேலியாவுக்கு நான் 2007ல் சென்ற எனது அறிமுக தொடரில், எனது தூக்கத்தை கெடுத்தவர் பிரெட் லீ. 2007 பிரெட் லீ அவரது கெரியரின் உச்சத்தில் செம ஃபார்மில் இருந்த காலக்கட்டம். அப்போது, பிரெட் லீ 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசிக்கொண்டிருந்தார். எனவே பிரெட் லீயை எதிர்கொள்வதற்காக அவரது பவுலிங்கை தொடர்ச்சியாக உற்று கவனித்தேன். 150-155 கிமீ வேகத்தில் வீசியதை தெரிந்துகொண்டேன். அப்போதைய இளம் வீரரான எனக்கு, அவரது பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்பதை நினைத்தே தூக்கம் கெட்டது.

பிரெட் லீ ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரோஹித் ஆடிய 7 ஒருநாள் போட்டிகளில் வெறும் 138 ரன்களும் 5 டி20 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித். அந்தளவிற்கு பிரெட் லீ, ரோஹித்தை போட்டு தாக்கியுள்ளார். 

பிரெட் லீக்கு அடுத்து டேல் ஸ்டெய்ன். ஒரே நேரத்தில் நல்ல வேகத்துடன் அருமையான ஸ்விங்கை எதிர்கொள்வது மிகக்கடினம். பிரேட் லீயை போலவே டேல் ஸ்டெய்னும் ரோஹித்தை பாடாய்படுத்தியுள்ளார். டேல் ஸ்டெய்ன் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடிய 3 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ரோஹித்தின் சராசரி வெறும் 30 தான். 

தற்போதைய பவுலர்களில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரது பெயரையும் ரோஹித் தெரிவித்துள்ளார்.