தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடிக்கும் அருமையான வாய்ப்பை தவறவிட்டார் ரோஹித் சர்மா.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அனைவரின் கவனமும் அவர் மீதே இருந்தது. 

இதை ஒரு அழுத்தமாக எடுத்துக்கொள்ளாமல், களத்திற்கு சென்று தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் ரோஹித். நிதானமாக தொடங்கி, செட்டில் ஆன பிறகு அவ்வப்போது சில பெரிய ஷாட்டுகளையும் அபாரமான ஷாட்டுகளையும் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்த ரோஹித் சர்மா, இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்திலும் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார். 

அவருடன் இணைந்து மயன்க் அகர்வாலும் அபாரமாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த மயன்க் அகர்வால், நேர்த்தியாக ஆடிவருகிறார். ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிக்கொண்டிருந்ததால் அவருக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு அருமையாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அசால்ட்டாக அடித்துள்ள ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடிக்கும் வாய்ப்பு இருந்தது. 

தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் மஹராஜ் வீசிய 82வது ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸரும் ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் அடித்த ரோஹித் சர்மா, அந்த ஓவரின் கடைசி பந்தில் குயிண்டன் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். க்ரீஸை விட்டு பெரிதாக இறங்கவும் இல்லை, பெரிய ஷாட் அடிக்க முயலவும் இல்லை. சும்மா வீணாக விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித். 176 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இன்னும் 2 ரன்கள் அடித்திருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரான 177ஐ முந்தியிருக்கலாம். அதைக்கூட செய்யாமல் சென்றுவிட்டார். ஆனாலும் ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் அபாரமானது. எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தெளிவாக ஆடப்பட்ட இன்னிங்ஸ். இந்த இன்னிங்ஸின் மூலம் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை ரோஹித் தக்கவைத்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.