Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்படும் சீனியர் வீரர்..! ரோஹித் சர்மாவுக்கு புதிய பொறுப்பு

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

rohit sharma likely to appoint as vice captain of india test team for south africa tour
Author
Chennai, First Published Dec 4, 2021, 4:42 PM IST

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்துவரும் ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தார்.

இந்திய அணிக்காக 78 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜிங்க்யா ரஹானே, 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 4756 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி ஆடாத போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பிவிட, அந்த தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றவர் ரஹானே.

ஆனால் அண்மைக்காலமாக படுமோசமாக பேட்டிங் ஆடிவந்த அஜிங்க்யா ரஹானே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரஹானே அடித்த ரன்கள்: 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 35, 4.

ரஹானே கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டே அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதையும் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலேயே அவரை சேர்க்க வேண்டாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் கோலி ஆடாததால், அவர் தான் கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதால், அவர் ஆடவைக்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியிலும் 35 மற்றும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அவர் சொதப்பிய அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமும் அரைசதமும் அடித்தார். இன்னும் ஹனுமா விஹாரி இருக்கிறார். அவரும் வந்தால் டெஸ்ட் அணியில் வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே நீக்கப்பட்டார். எனவே இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரஹானே அப்படியே ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிகுறியாக, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஆடவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஹானே துணை கேப்டனாகவும், கோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டதன் விளைவாகத்தான் அவர் இவ்வளவு காலம் இந்திய அணியில் இருந்தார். இல்லையெனில் அவர் என்றைக்கோ நீக்கப்பட்டிருப்பார் என்று கம்பீர் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

ரோஹித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டால், அஜிங்க்யா ரஹானேவின் கெரியர் கிட்டத்தட்ட முடிந்தது என்று வைத்துக்கொள்ளலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios