இந்திய அணியில் விராட் கோலிக்கு நிகரான சிறந்த வீரர் ரோஹித் சர்மா. விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகிய இருவரது பேட்டிங் ஸ்டைலும் உத்தியும் வேறு வேறு. விராட் கோலி திறமையை வளர்த்துக்கொண்டு தலைசிறந்து விளங்குபவர். ஆனால் ரோஹித் சர்மா இயல்பாகவே சிறந்த பேட்டிங் திறமையை கொண்டவர் மட்டுமல்லாது நல்ல டெக்னிக்கை கொண்டவர்.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார் என்றால், அவருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ரோஹித் சர்மாவும் சாதனைகளை குவித்துவருகிறார். தனது கெரியரின் தொடக்கத்தில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், 2013க்கு பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ள ரோஹித் சர்மா, கோலிக்கு நிகராக சாதனைகளை குவித்துவருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக அவரது பேட்டிங் அபாரம். மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான பேட்டிங்கால் பல சாதனைகளை முறியடித்து அசாத்திய மைல்கற்களை செட் செய்துவருகிறார் ரோஹித். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்தாலும், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துவிட்டார். சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கும் ரோஹித் சர்மாவிற்கு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் அபாரமான சாதனை ஒன்று காத்திருக்கிறது. 

ஹைதராபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ஒரு சிக்சர் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைப்பார். 

ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 399 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இன்னும் ஒரு சிக்சர் அடித்தால் 400 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு அடுத்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக தோனி(359 சிக்சர்கள்) திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித்துக்கு முன்னதாக இரண்டே வீரர்கள் தான் உள்ளனர். 534 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும் 476 சிக்ஸர்களுடன் ஷாஹித் அஃப்ரிடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதற்கடுத்து ரோஹித் சர்மா உள்ளார். ரோஹித் சர்மா இவர்கள் இருவரின் ரெக்கார்டையும் முறியடிப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.